

பெசன்ட் நகரில் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது காவல் துறையை ஏவி அடக்குமுறையைக் கையாண்டுள்ள தமிழக அரசின் செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எழுந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்ட போதிலும், நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் ஜனநாயகத்தைக் காக்கக் கோரி களமிறங்கியுள்ளனர்.
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சிக் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னை பெசன்ட் நகரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக முறையில் குரல் எழுப்பிய இந்த இளைஞர்களைத் தடுத்து நிறுத்திய தமிழகக் காவல்துறை, அவர்களைத் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லியில் நிலவும் ஒடுக்குமுறைச் சூழலின் தொடர்ச்சியாகச் சென்னையிலும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெசன்ட் நகரில் அமைதியாகப் போராடிய இளைஞர்கள் மீது காவல் துறையை ஏவி அடக்குமுறையைக் கையாண்டுள்ள தமிழக அரசின் செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த நாடும், பல எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் நிலையில், தமிழக அரசு மட்டும் மத்திய அரசுக்குப் பயந்து நடுங்கி இளைஞர்களின் குரலை நசுக்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுயமரியாதையும் நாட்டின் மீதும் அக்கறை கொண்ட இளைய சமுதாயத்தைக் கைது செய்வதன் மூலம், இந்த அரசு "டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை" என்பதை முதலமைச்சர் மீண்டும் நிரூபித்துள்ளார் என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.