தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது!

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Chennai Protests
Published on: 
Summary

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவகாரங்களை மையமாகக் கொண்டு தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரி பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் திட்டமிடப்பட்டுள்ள தீவிரப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பலைகள் வலுத்து வருகின்றன.

டெல்லிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் சென்னையின் முக்கியப் பகுதியான பெசன்ட் நகரில் இளைஞர்கள் திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்ததுடன், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளதைக் காட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com