

திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. நகராட்சி பணி நியமன முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி, சென்னையில் உள்ள கே.என்.நேருவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களை வைத்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சோதனை குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டின் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமானோர் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
அந்தவகையில் தி.மு.க. ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் வகித்து வந்த துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி இருந்தது.
அதன் அடிப்படையில் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி., இன்பதுரை மனு தாக்கல் செய்தி ருந்தார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கே.என்.நேரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்ட கே.என்.நேருவின் சகோதரர்களான கே.என். மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் கவிபிரசாத், ரமேஷ், நாராயணன், தியாகராஜன், செல்வமணி ஆகியோரும் தங்களுக்கு எதிராக வழக்குப்பதிய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மறு ஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இறங்கி உள்ளனர்.
இதையடுத்து இன்று சென்னை, திருச்சி,கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீடுகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி தில்லைநகரில் கே.என்.நேருவின் வீடு அமைந்துள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹேமச்சந்திரா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 3 கார்களில் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீடுகளின் கதவுகளை பூட்டி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் போது கே.என்.நேரு மற்றும் அவரது வக்கீல் பாஸ்கர் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி, சென்னையில் உள்ள கே.என்.நேருவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களை வைத்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனை முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
சோதனை குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் வீட்டின் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு ஏராளமானோர் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கோவையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுடன் தொடர்புடைய 2 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கோவை சிங்காநல்லூர் அருகே கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு உள்ளது. சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி.ரெசிடென்சியில் மணிவண்ணனின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. இந்த 2 இடங்களிலும் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருமுறை சோதனை நடத்தியுள்ளனர். தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனையையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், அணைக்கட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.பி.நந்தகுமாரின் வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.
காட்பாடி காந்திநகரில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்பக்கமாக கதவுகளை பூட்டி அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் பொதுப்பணித்துறை உள்ளிட்ட ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவரது வீட்டு முன்பு தி.மு.க.வினர் திரண்டதால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் தி.மு.க. எம்.எல்.ஏ.ராமலிங்கத்தின் வீட்டிலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் மோகனூர் சாலை காந்திநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 8.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர்.
அப்போது வீடு பூட்டி இருந்தது. வெளியில் சென்றிருந்த ராமலிங்கத்தை வரவழைத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள துரை என்பவர் வீட்டிற்கு நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீசார் சென்றனர்.
அப்போது வீடு பூட்டி இருந்ததால் அவரிடம் போலீசார் தொடர்பு கொண்ட போது தான் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் போலீசார் சம்பந்தப்பட்ட துரையின் செல்போன் வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பி அதன் பிறகு பிறகு விசாரிக்க உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், நேருவின் ஒப்பந்த அடிப்படையில் நண்பரான துரை என்பவர் பல ஆண்டுகளாக நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளில் நகராட்சி ஒப்பந்த பணிகள் மற்றும் கட்டிட பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும், முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காலை முதல் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. சுமார் 6 முதல் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி நகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக கே.என்.நேரு வீடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தற்போது நகராட்சி பணி நியமன தொடர்பாக மீண்டும் சோதனை நடத்தி உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு அடங்கும் முன்னரே கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.