தவெக எம்எல்ஏ ஆபாச குறுந்தகவல் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தேசிய மகளிர் ஆணையமே செய்தித்தாள்களில் வந்த தகவலின் அடிப்படையில்தான் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை ஐகோர்ட்
Published on: 

சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. வக்கீல் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் முறைப்படி புகார் அளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொது வெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும். எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி. மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட வேண்டும். டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து பத்திரப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, செய்தித்தாள்களில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக மாவட்ட கலெக்டர் எதுவும் புகார் அளித்துள்ளாரா? ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு போலீஸ் தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், தலைமை செயலாளர் உள்பட யாரிடமும் புகார் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அனைத்து உயர் அதிகாரிகளும் பாதுகாப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையமே செய்தித்தாள்களில் வந்த தகவலின் அடிப்படையில்தான் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து கலெக்டரிடம் இருந்து எந்த புகாரும் அளிக்காத நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

ஒருவேளை குறுஞ்செய்தி அனுப்பியது உண்மையாக இருந்தால், அது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளை கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.

X