சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது- டிடிவி தினகரன்

வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முற்றிலும் முரண்பாடு

ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் ஜோசப் விஜயின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.

தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com