கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்!

மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று (சனிக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

முதல்வர் கண்டனம்:

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் என விசாரணையில் தெரியவந்தது. மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், பலர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த சம்பவத்தை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தள பதிவு:

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பதிவில், "கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு:

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com