பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல் ஹாசன் வாழ்த்து

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கமல் ஹாசன் வாழ்த்து
Published on

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இவரைத் தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், "தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தி, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரித்து, கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தி, மாநில உரிமைகளை மதிக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "தங்களின் மிகப்பெரிய பலத்தை பயன்படுத்தும் நாடுகள், அதன் மக்கள் மிகப் பெரிய பெருமைகளை சந்திப்பார்கள். மதிப்புக்குரிய இந்திய பிரமதர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேச நலன், ஒற்றுமை மற்றும் தேசிய கடமை உணர்வில், 18-வது மக்களவையில் தேர்வாகியிருக்கும் பிரதிநிதிகள் ஒன்றிணைன்து பணியாற்றி மேலும் வலிமையான, பிரகாசமான இந்தியாவை உறுவாக்கும் கனவை நிறைவேற்ற செயல்படட்டும். ஜெய் ஹிந்த்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், "இந்திய வரலாற்றில், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கும், அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதிலும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும் புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com