விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: திமுக குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அளித்த பதில்

எந்த ஒரு அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தனிப்பட்ட முறையில் விவசாயிகள் மீதோ அல்லது ஆசிரியர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்க முடியாது என்றார்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on
Summary

110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று 110 விதியின் கீழ் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான கடந்த ஐந்து ஆண்டில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு சில விளக்கங்களை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறுகையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிப்பதை யாரும் மறுக்கவில்லை.

பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசு போட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, முந்தைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டும் வகையில் 110 விதியை அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த ஒரு அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தனிப்பட்ட முறையில் விவசாயிகள் மீதோ அல்லது ஆசிரியர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்க முடியாது.

இதுபோன்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக 110 விதியில் அறிவிப்பதன் மூலம், இனி இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வழக்கே பதிவு செய்யப்பட மாட்டாதா அல்லது நில எடுப்பு போன்ற பணிகளின் போது சட்டம்-ஒழுங்கை அரசு கண்டு கொள்ளாதா?

முந்தைய அரசைக் குறை கூறுவதற்காக 110 விதியைப் பயன்படுத்துவது சட்டமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது

இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.

இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது. வேண்டுமானால் 110 விதியின் கீழ் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்று பட்டியல் தரவா? என்று சபாநாயகர் எதிர் கேள்வி எழுப்பினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com