

தி.மு.க. துரோகத்தால் அறந்தாங்கி தொகுதியில் தோல்வி அடைந்ததாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் ராஜதந்திர முடிவுகள் பா.ஜ.க. ஆட்சியை தடுக்க உதவியதாகவும், காங்கிரசின் இலக்கு காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் காங்கிரஸ் மண்டல நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க., தொண்டர்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற நன்றாக பணியாற்றினார்கள். அதனால் தான் 65,000 வாக்குகளை அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் பெற்றது. ஆனால் தி.மு.க. நிர்வாகிகள், காங்கிரஸ் வெற்றியடைய கூடாது என்ற நோக்கத்தோடு வேலை செய்தனர். இதனால் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
தற்போது அந்த துரோகத்தில் இருந்து தப்பித்து வந்துள்ளோம். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தி முடிவெடுத்ததை தடுத்தது என்னை போன்ற தலைவர்கள்தான். ராகுல் காந்தி 40 நபர்களை அழைத்து கேட்டார். நாங்கள் தான் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவித்தோம். அதனால் தான் அவர் முடிவெடுக்கவில்லை.
நாங்கள் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் முடிவெடுத்து இருப்பார். 50 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு கிடைத்து இருப்பார்கள் . 2 மந்திரி அல்ல 6,7 மந்திரிகள் கிடைத்து இருப்பார்கள். ஒரு துணை முதலமைச்சர் வாய்ப்பு கூட கிடைத்திருக்கும்.
தேர்தலுக்கு முன்பு அது போன்ற முடிவை நம்மால் எடுக்க முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிறகு யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும் என்று முடிவெடுத்தோம். அதற்கு காரணமும் இருந்தது. நாம் அவ்வாறு முடிவு எடுக்கவில்லை என்றால் பின் வாசல் வழியாக பா.ஜ.க., வந்திருக்கும். மீண்டும் தேர்தல் கூட வந்திருக்கலாம். கவர்னர் ஆட்சி வந்திருக்கலாம். மறைமுகமாக பா.ஜ.க., ஆட்சி கூட செய்திருக்கும். அதை தடுப்பதற்காகத்தான் ராகுல் காந்தி ராஜதந்திரமாக முடிவெடுத்தார். அந்த முடிவால் காங்கிரசுக்கு பலன் கிடைத்துள்ளது.
ராகுல் காந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் இருக்கக்கூடிய நட்பு தற்போது ஏற்பட்ட நட்பு அல்ல. முன்பு இருந்தே இருக்கக்கூடிய நட்பு. தற்போது முதலமைச்சர் விஜயை பிரதமர் என்று சொல்கிறார்கள். எம்.எல்.ஏ. கூட இல்லாத கட்சியினர் முதலஅமைச்சராக வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதுபோல் முதலமைச்சராக இருப்பவரை பிரதமர் என்று தான் சொல்வார்கள். அதற்காக நாம் கோபம் கொள்ள தேவையில்லை. நம்முடைய இலக்கு காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.