கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
seeman
Published on: 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தில் ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக புதிய கிளிங்கர் அரவை ஆலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்த ஆலை அமைப்பதால் கார்த்திகேயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிப்படையும் எனப் பொதுமக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார் மற்றும் தடையை மீறி ஆலை அமைக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

மக்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்

அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட

மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களின் நலன், நீர்வளம், விவசாயம் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வாதாரம் ஆகியவை குறித்து முழுமையான மதிப்பீடு செய்யப்பட வேண்டியதும், அப்பகுதி மக்களின் கருத்தினைக் கேட்க வேண்டியதும் மிகவும் இன்றியமையாததாகும்.

அதனை விடுத்து, கிளிங்கர் அரவை ஆலையில் கிளிங்கர் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்ற காரணத்தைக் காட்டி, கிளிங்கரால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைப் புறக்கணித்துவிட முடியாது. கிளிங்கர் அரவை ஆலையில் மூலப்பொருட்களைக் கையாளுதல், சிமெண்ட் அரவை, தூசு பரவல், கனரக வாகனப் போக்குவரத்து, ஒலி மாசு மற்றும் நீர்வளப் பயன்பாடு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு அனுமதியளிக்க கூடாது

மக்களின் கருத்துகளையும் எதிர்ப்புகளையும் மதிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் திணிப்பது மக்களாட்சி நெறிமுறைகளுக்கு எதிரானதாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு நாட்டு மக்களின் வாழ்வுரிமையைவிடத் தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கம் என்பது முதன்மையானது அல்ல.

சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி மக்களின் கடமையோ, அதைப்போலவே, இயற்கையைப் பாதுகாப்பதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் முதன்மைக் கடமையாகும். சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசு அனுமதியளிக்கக்கூடாது.

ஆகவே, தமிழ்நாடு அரசு மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளிங்கர் அரவை ஆலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com