'ஊடுருவல்காரர்கள்’அமித் ஷா கட்டவிழ்த்துவிட்டுள்ள அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் - மாணிக்கம் தாகூர்

அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள்
Manickam Tagore
Published on: 

வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு,

3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார் .

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிடுள்ளதாவது

அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? ஒருவேளை இவர்கள் SIR நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன்.

2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும்

பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?

இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா?

உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே 'சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்' என்பதுதான்.

நவம்பர் 1 அன்று நடைபெற்ற INDIA கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார்.

வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்

X