

இந்தியா கூட்டணி பேரணியில் பிரியங்கா காந்திக்கு பேச வாய்ப்பு வழங்கப்படாததை பாஜக விமர்சித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று இந்தியக் கூட்டணியின் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணாமுல் தலைவர் மம்தா என பலர் பேசினர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் அவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதனிடையே இந்த பேரணி குறித்து அமித் ஷா, நட்டா என பல பாஜக தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் பேரணியில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அணி, பிரியங்கா காந்தியை தொடர்ந்து பின்னுக்குத் தள்ள முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவரை உரையாற்ற விடாமல் ராகுல் காந்தி அவரைத் தடுத்தாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நிகழ்வில் பிரியங்கா காந்தியின் நாற்காலி இரண்டாவது வரிசையில் போடப்படுத்திருந்ததையும் அவர் விமரிசித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆதரவாளர்களிடையே மோதல் நடந்து வருவதாக குறிப்பிட்ட பண்டாரி, "பிரியங்கா காந்தியின் தரப்பு குறித்து ராகுல் தரப்பு அச்சப்படுகிறது, எனவே தான் பிரியங்கா காந்தியை ஒடுக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என சாடினார்.
நாட்டின் மக்களும் காங்கிரஸும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டு, தனது அரசியல் பிம்பத்தை மீட்டெடுப்பதில் ராகுல் காந்தி மும்முரமாக இருப்பதாக பண்டாரி மேலும் தெரிவித்தார்.
முன்னதாக நேற்றைய பேரணியில் பேசிய ராகுல் ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார் என்றும் அவரை தொடர்ந்து பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், அவர்கள் எங்கும் தப்ப முடியாது என்றும் பேசியிருந்தார்.