

மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா இன்று காலை சென்னையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு (வயது 84). 'இயக்குநர் இமயம்' என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் சினிமாவின் கிராமப்புற கதைகளை யதார்த்தமாக படமாக்கி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியவர். பாரதிராஜா தனது தனித்துவமான குரலால் “என் இனிய தமிழ் மக்களே” என்று பேசி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் கட்சியினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா இமயம்அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் திரையுலகின் “இயக்குனர் இமயம்” எனப் போற்றப்பட்ட மதிப்பிற்குரிய திரு. பாரதிராஜா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், மீளாத துயரமும் அடைந்தேன். அதுவரை திரைப்படக் கலை சினிமா செட்டுகளுக்குள் மட்டுமே கட்டுப்பட்டிருந்த காலத்தில், இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களின் மண்வாசனையையும், மக்களின் இயல்பான வாழ்வியலையும் வெள்ளித்திரையில் உயிர்ப்பித்து, தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாபெரும் படைப்பாளி அவர். “16 வயதினிலே”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “வேதம் புதிது”, “கருத்தம்மா” உள்ளிட்ட எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்தியதோடு, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலையான இடத்தைப் பெற்றவர்.
திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாது, சமூக அக்கறை மிக்க சிந்தனையாளராகவும், பல தலைமுறை கலைஞர்களை உருவாக்கிய வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கும், கலை இலக்கிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரையுலக சகோதரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! என இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் திரு. ஜி.கே.வாசன், தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக, நடிகராக விளங்கிய பாரதிராஜா அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. 1977 ல் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தன் இறுதி மூச்சு வரை தமிழ் திரையுலகத்திற்காக பாடுபட்டவர். பல்வேறு நடிகர் நடிகர்களை அறிமுகப்படுத்தி, புகழ் பெற வைத்த பெருமைமிக்கவர். குறிப்பாக சினிமாவில் யதார்த்தத்தையும், கிராம வாழ்க்கை முறையையும் மக்கள் மனம் கவரும் வகையில் வெளிக்கொணர்ந்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் எனப் பேரும் புகழும் பெற்றவர். இயக்குநராகவும், பல படங்களில் குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் பாரட்டைப் பெற்றவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், கலையுலகத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியவர்.
மறைந்த பாரதிராஜா அவர்களின் திரைப்பயணம் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து புகழோடு நிலைத்து நிற்கும். அவரது கலைப்படைப்புகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பத்ம ஸ்ரீ, கலைமாமணி என மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற போற்றுதலுக்குரியவர். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இயக்குனர் இமயம் என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வெற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார். நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்ட பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். கடந்த 2ஆம் தேதி மாலை பாரதிராஜா அவர்களை, இயக்குனர் தங்கர் பச்சானுடன் சென்று அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். எனது நலம் விசாரித்த அவர், பொதுவான விஷயங்கள் குறித்து என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பார்த்த நான் விரைவில் அவர் முழுமையாக நலம் பெறுவார், இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார். இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். என இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பெரும்பான்மையினரின் யதார்த்தவாத குரல்களை திரையில் பதிவு செய்த அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.அவரது குடும்பத்தினர், திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.