டாஸ்மாக் கடை அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 7 பேர் கைது

தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடை அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய 7 பேர் கைது
Published on: 
Summary

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் டாஸ்மாக் கடை முன்பு 2 பேருக்கு அரிவாள் வெட்டு 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

டாஸ்மாக் கடையில் தகராறு

கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்தவர் அழகர்சாமி மகன் லோகநாதன் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கோபால்பட்டி டாஸ்மாக்கடை அருகில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மஞ்சநாயக்கன் பட்டியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது21) என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடங்காத தாமரைகண்ணன் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அதேபோல் லோகநாதனும் தனது நண்பரை சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார். இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரமடைந்த தாமரைக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லோகநாதன் மற்றும் அங்கு வந்த அவரது நண்பர் அன்புக்கரசன் (வயது 25) ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டியதில் இருவரும் தலை, கையில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அன்புக்கரசன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

7 பேர் கைது

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு மஞ்சிமா மேற்பார்வையில், சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தாமரைக்கண்ணன், இந்திரா நகரைச் சேர்ந்த (19), சுரேஷ் என்ற மைதா (29 ), அசாருதீன் (36)பள்ளபட்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி (22), புதுப்பட்டியைச் சேர்ந்த வீரமணி (25), சரவணன் (25) ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அமர் என்ற அஷ்ரப்தீனை சாணார்பட்டி போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com