வீரம் என்றால் இதுதான்! இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்! - தமிழிசை

விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது
Indian captain Smith Machar - Tamilisai soundararajan
Published on: 
Summary

நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற போராடிய துணிச்சல் - இந்தியர்களின் கடமை உணர்வுக்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இந்திய கேப்டன் சுமித் மச்சார் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

துபாய் சர்வதேச விமான நிலையம்

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்த பிரமாண்ட விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த தலைமை கேப்டன் ஸ்மித் மச்சர் திறம்பட இயக்கினார். அவருக்கு உதவியாக ஓமன் நாட்டைச் சேர்ந்த நபர் துணை விமானியாகப் பணியாற்றினார்.

துணை விமானி தாக்குதல்

விமானம் புறப்பட்ட 2½ மணி நேரத்தில் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, திடீரென தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, இந்திய கேப்டனான ஸ்மித் மச்சரை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டைப் பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்லச் சதி செய்தார்.

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சர்

காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சர், விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாகப் போராடினார். அப்போது விமானத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் சுதாரித்துக் கொண்டனர்.

விமானம் தரையிறக்கம்

அப்போது கேப்டன் காக்பிட் கதவைத் திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

காயமடைந்த இந்திய கேப்டன் மற்றும் விடுப்பில் பயணித்த ராணுவ வீரர்களின் சாதுரியத்தால் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

துணை விமானி கைது

இதையடுத்து, விமானத்திற்குள் புகுந்த சவுதி அரேபிய பாதுகாப்புப் படையினர், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓமன் நாட்டுத் துணை விமானியை உடனடியாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.

பயணிகளின் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் விமானியுடன் இந்திய விமானி போராடியபோது, இரும்பு ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இந்திய விமானிக்கு பாராட்டுகள்

சவுதியில் விமானம் தரையிரங்கிய போது, ஊழியர்கள் இந்திய விமானியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதியிடம் இருந்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வீரம் என்றால் இதுதான்!

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற Flydubai விமானத்தில், இந்திய கேப்டன் சுமித் மச்சார் தனது சக விமானியான துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், அசாதாரண துணிச்சலுடன் போராடி விமானத்தை நிலைநிறுத்த உதவியுள்ளார். விமானம் திடீரென ஆயிரக்கணக்கான அடி உயரம் சரிந்த நிலையில், பயணிகளும் விமானக் குழுவினரும் தலையிட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் கடமையை கைவிடாத இந்திய கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலுக்கு பாராட்டுகள்!

“தன்னை காயப்படுத்திய நிலையிலும், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற போராடிய துணிச்சல் -இந்தியர்களின் கடமை உணர்வுக்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.” அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com