

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.
இதன்பின் கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் குறித்து புகாரளித மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த விவகாரத்தில் காவல்துறை உடந்தை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உண்மையை மூடி மறைக்க காவல்துறை முயல்வதாக அதிமுக எம்எல்ஏ காமராஜ் குற்றம்சாட்டினார்.
இதனிடையே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவையில் பேசுகையில்,
"தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கல்வி சாலைகள் என்பது வரிய எளிய பெற்றோர்களுடைய குழந்தைகளுடைய வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.
ஒரு பள்ளிக்கூடத்திலும் ஒரு கல்லூரியிலும் வன்முறை சம்பவங்களோ, போதைப் பழக்கங்களோ எதுவும் நடக்கக்கூடாது என்பதே அரசியல் கடந்து இந்த அவையில் உள்ள எல்லோரின் விருப்பம்.
கோவை சம்பவத்தின் பாதிக்கப்பட்ட மாணவனாக இருக்கட்டும், திருவொற்றியூரில் கொல்லப்பட்ட சிறுவனாக இருக்கட்டும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை. ஒவ்வொரு குடும்பத்தின் பரிதவிப்பு எங்கள் பரிதவிப்பு. அவர்களுக்கு அது ஈடு செய்ய முடியாத இழப்பு.
முதலாவதாக அந்த குடும்பத்திற்கு தேவைப்படும் நேர்மையான போலீஸ் விசாரணை நடைபெற வேண்டும் என முதல்வர் உத்தரவுக்கு இணங்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளோம். மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ள அந்த குடும்பத்தின் துயரத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம். துயரத்தில் துணை நிற்கிறோம்.
உடனடியாக எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த குடும்பத்திற்கு தேவையான இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் நடவடிக்கையை நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே செய்துகொண்டிருக்கிறோம். அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களுக்கு பாதுகாப்பு, நேர்மையான விசாரணை அனைத்தும் செய்யப்படுகிறது. தவெகவின் நிலைப்பாடு ஒன்றுதான். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
ஒருவேளை அது கும்பல் மோதலா? போதைப்பொருள் காரணமா, அல்லது வேறு சமூக விரோதிகளுக்கு சம்பந்தம் உண்டா? கல்லூரிகளில் இதற்கு முன்பு இதுபோன்ற வன்முறை நடந்திருக்கிறதா? இனி இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் நேராமையான முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானது செய்ய வேண்டியது எங்கள் கடமை. கேட்கவேண்டியது அவர்கள் உரிமை. நேற்று எண்களின் சமூக நீதித்துறை அமைச்சர், மற்றும் அமைச்சர் சம்பத் கோவைக்கே நேரில் சென்று அந்த குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்தார்கள்.
நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகிய நானும், அமைச்சர் ஆதவும் திருவொற்றியூர் சென்று கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோரின் கை பிடித்து ஆறுதல் தெரிவித்தோம்.
இந்த சம்பவத்தில் ஒருவரை தவிர கொல்லப்பட்டவர் மற்றும் கொலை செய்தவர்கள் அனைவரும் சிறுவர்கள். இதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பொறுத்தவரை ஒரு எதிரி கூட தப்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அந்த தாயிடம் நாங்கள் வாக்களித்திருக்கிறோம்.
யாராக இருந்தாலும், எத்தனை வழக்கறிஞர்கள் கொண்டு வந்தாலும், பாதிக்கப்பட்ட அமுதன் மற்றும் தனுஷ் வழக்கு நடத்தி சட்டரீதியாக ஒருவரும் தப்பிக்க முடியாதபடி தண்டனை பெற்றுத்தருவோம்.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகளை அழைத்து அதற்கு தேவையான திட்டவட்டமான வலுமுறைகளை வகுத்து வருகிறோம்.
திருவொற்றியூரில் கொல்லப்பட்ட தனுஷின் மூத்த சகோதரர் இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவருக்கு எஸ்சிஎஸ்டி பிரிவின் கீழ் அரசு வேலை வழங்க முதல்வர் முடிவு செய்திருக்கிறார்.
மேலும் நிவாரண தொகையுடன் சிறுவனின் பெற்றோருக்கு மாதம் ரூ.8000 ஓய்வூதியம் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு தான் இன்று சட்டசபைக்கு வந்துள்ளோம்" என தெரிவித்தார்.