

4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.
இதன்பின் கோவை கல்லூரியில் மாணவன் கொலை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின், கோவை கள்ளக்குறிச்சியில் போதை கும்பல் குறித்த தகவல் கொடுத்த கல்லூரி மாணவன் அடித்துக்கொள்ள கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசு விளக்கமளிக்க கோரினார்.
தனது முறையின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ காமராஜ் பேசுகையில்,
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 19 வயதே ஆன பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த அவையின் கவனத்துக்கு அதிமுக சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.
இந்த கொடுமையான கொலை சம்பவம் குறித்து அமுதன் தயார் மற்றும் தந்தை ஆகியோர் கூறுகையில், எங்கள் மகன் அமுதன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அந்த விடுதியில் சில மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தார்.
அவர் புகார் அளித்தது வெளியே கூறப்பட்டுவிட்டதால் அந்த மாணவனை புகாருக்கு உட்படுத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் நிர்வாகம் அந்த மாணவனை அழைத்து வெளியே தங்கிக்கொள்ளும்படி சொல்லிவிடுகிறார்கள்.
அவர் இரண்டாம் ஆண்டு படிக்கிற நண்பர் அறையில் தங்குகிறார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன் நண்பரோடு கல்லூரிக்கு காலை 9 மணிக்கு வருகிறார். அப்போது தீபக் என்கிற ஒரு மாணவன் மற்றும் அவரோடு 20 பேர் சேர்ந்து அவரை துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மைதானத்திற்கு கொண்டு சென்று அங்கே இரும்பு கம்பிகளால் அடித்தும் கத்திகளால் குத்தியும் கொலை செய்யப்படுகிறார்.
இதனால் பெற்றோர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறும்போது, முதல்வர், டீன், பிஆர்ஓ கூறும்போது, அவர் எந்தவிதமான போதைப்பொருள் குறித்த புகார்கள் தெரிவிக்காவில்லை. அந்த நபர்களுக்கும் தங்கள் கல்லூரிக்கும் சம்மதம் இல்லை என்று சொல்கிறார்கள்.
இன்னும் கொடுமை என்னவென்றால் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது இது சீனியர் ஜூனியர் சண்டை, செல்போன் தொடர்பான பிரச்சனை, இது கோஷ்டி மோதல் என்கிறார். ஒருவரை 20 பேர் தூக்கிச் சென்று கொலை செய்வது எப்படி கோஷ்டி மோதல் ஆகும்.
காவல்துறை உண்மையை மறைக்க முயற்சி செய்கிறது. கல்லூரியும் பெயருக்கு களங்கம் ஏற்படும் என உண்மையை மறைக்கிறது. இதில் அரசு தலையிட்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களில் இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை என சொல்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
6 லட்சம் நிவாரணமாக அந்த குடும்பத்திற்கு அரசு வழங்கியிருக்கிறது. அது போதாது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் இறந்திருக்கிறார். எனவே அவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல திருவொற்றியூரில் தனுஷ் என்கிற பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். அதற்கு அந்த பகுதியில் உலவிய போதைப்பொருள் காரணம் என்கிறார்கள்.
எனவே எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவ்வப்போது குறிப்பிடுவதுபோல பள்ளி, கல்லூரிகளில் எந்த காரணம் கொண்டும் போதைப்பொருள் இருக்கக்கூடாது.
அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறுவதை போல அதன் அடிப்படையில் போதைப்பொருள் ஒடுக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் பயத்தில் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவன் குடும்பத்திற்கு வழங்கியதுபோல திருவொற்றியூர் மாணவனுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி அமர்ந்தார்.