பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்க திமுக அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் திமுக எதிர்ப்பு இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் புதிய மசோதாவில் எழுத்துப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் 1971 மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்த புதிய மசோதா வழிவகை செய்வதால் ஆதரவு அளித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தொகுதி மறுவரையறைக்கு திமுகவின் வெளிப்படையான ஆதரவு தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய துரோகமாகும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும்.ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது.இந்த மசோதா வருவதற்கு முன்பாகவேதமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை
அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது.சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.
ஆனால்,இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும்.
காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக.இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது.
அது மட்டுமல்ல,திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில்,உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது.
திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான்கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர்.அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது.முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார்.
உச்சநீதி மன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல்,நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு.
இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு.இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால்.கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது.
உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது.
மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் ‘முதுகுத்தியாக’ மாறுவதை தமிழர்களும்
மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா?திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை-இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.
என்று தெரிவித்துள்ளார்.