

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.
அமைப்பு ரீதியாக தி.மு.க.வுக்கு 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.
தற்போது இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்படும் செயற்குழுவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.
செயற்குழு கூட்டம் பற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.