உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றுள்ளார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்
Published on
Summary

நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார்.

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசினர். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வழக்குகள் வாபஸ் பெறுவது இதுதான் வரலாற்றில் முதன்முறை என அமைச்சர் ஒருவர் பேசினார். இது சரியான தகவல் இல்லை. எங்களுடைய தலைவர் எங்களுடைய ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச்சட்டம், வேளாண் சட்டசம், 8 வழிச்சாலை போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றுள்ளார். அப்போது எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரிகளை அழைத்து சொல்லிவிட்டு இந்த அவையில் வழக்குகள் வாபஸ் என்று அறிவித்தார். எனவே இந்த அறிவிப்பு முதன்முறை அல்ல என்றார்.

இதை அடுத்து சில மணி நேரம் கழித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது நான் எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று சொல்லியிருந்தேன். நீங்கள் அதை அவைக்குறிப்பில் எடுத்துக்காட்டினீர்கள். அதில் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். இதனால் நான் பேசிய குறிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எதிர்க்கட்சி தலைவரிடம் அந்த ஆதாரத்தைக்காட்டியவுடன், இதனை உடனே கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள், நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com