சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
Published on

சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.

அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

இதயத்தில் இருந்து பேசுகிறோம்

நமது குடும்பத்தில் இருக்கிற, நமது வீட்டில் இருக்கிற நமது பாட்டி, அம்மா, அக்காவை, தங்கையை பற்றிய ஒரு தீர்மானம். அதைபற்றி அவர்களுக்காக நமது இதயத்தில் இருந்து பேசுகிறோம். இதற்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்துக்கும் இன்னிக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது என்னுடைய பாட்டி, அம்மா, தங்கைகள்தான்.

அவர்கள் மிகப்பெரிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது. அந்த நன்றி, விசுவாதத்தோடு, அப்படி ஒரு உணர்வோடுதான் இங்கு நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்தால் ஒரு வீட்டுக்கோ, பெரிதாக பொருளாதாரம் இருந்திட்டால் ஒரு நாட்டுக்கோ பெரிய பெயர் வந்து விடும் என்று சிலபேர் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு நாட்டுக்கோ, வீட்டுக்கோ எப்போது பெரிய பெயர் கிடைக்கும் தெரியுமா?

அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால்தான் பெரிய பெயர் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும். நமது தமிழ்நாட்டு மண்ணில் சங்க காலத்தில் இருந்து அன்றும் சரி, இன்றும் சரி மிகப்பெரிய ஆளுமையாக பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்கிறாங்க.

இன்று இந்த பேரவையின் வாயிலாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமை. இது ஒருவருக்கான வெற்றி அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயருகிறது.

ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம்பெறும்போது ஒரு நாடே உயருகிறது. மக்கள் தொகை மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால் ஏற்படும் காலதாமத்தின் காரணமாக பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை ஒத்திவைக்கக் கூடாது என்றும், அதை விரைவாக அமல்படுத்த தகுந்த அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.

ஆதரவு

இதனை தொடர்ந்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

அதனை தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com