சோனியா காந்தி சுயசரிதை வெளியீடு: விழாவில் பங்கேற்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

ராகுல் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாக பிரபல நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது.
MK Stalin
Published on: 

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, 'பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். ஹார்பர்காலின்ஸ் இந்தியா பதிப்பகத்தால் கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் விஜய், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக் விந்தர் சிங் சுகு, தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாகவும், ராகுல் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் பிரபல நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது.

ராகுல் காந்தியுடன் உரையாடுவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை, காங்கிரசுடன் இனி கூட்டணி வேண்டாம் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், "சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீடு தொடர்பாக அழைப்பிதழ் வரவில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். கடிதமும் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X