தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: சிபிஐ, சிபிஎம் ஆதரவு- தே.மு.தி.க. நிலை?

முதலமைச்சர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை. பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.
தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்
தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்
Published on

முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.

தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-

நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும். பெண்களுக்கான அரசாக, அவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அரசாக இந்த அரசு இருக்கும். பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கானது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி வரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைக்கக் கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். ஆகையால் உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை. பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.

மற்ற கட்சிகள் பேசிய பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் கூறினார்.

ஆதரவு

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது. முதலில் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசுவாமி பேசினார்.

அப்போது, முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்கள் எல்லோரும் பேச நேரம் இல்லை. பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலக்ஙளில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம். மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய நமக்கு மத்திய அரசு இதை ஒரு தண்டனையாக கொடுக்கிறது. மக்கள் தொகையை கணக்கெடுக்காமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநில உரிமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. வடமாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதே பாஜகவின் நோக்கம் என்றார்.

இதையடுத்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில்,

தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கு பாதிப்பாக அமையும். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதிவரையறை மசோதா. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவால். குடும்பக் கட்டுப்பாட்டை கறாராக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உ.பி., பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சாதகமாகிவிடும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில்,

எதன் அடிப்படையில் தனித்தீர்மானம்?

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட முன்வடிவை மத்திய அரசு இதுவரைகொண்டு வரவில்லை. சட்ட முன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது? மக்கள் தொகையை காரணம் காட்டி தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. 815 எம்.பி.க்கள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும். தமிழ்நாட்டுக்கான எம்பிக்கள் உயரும்போது நமது மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசமுடியும். 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என இருக்கும் நிலையில் அது 8 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என மாறும். தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com