சென்னை வருகை தருகிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் விஜயுடன் இணைந்து மெட்ரோ ரெயிலில் பயணம்!

பூந்தமல்லி - வடபழனி இடையே 2-ம் கட்ட மெட்ரோ சேவையை பிரதமர் மோடிதொடங்கி வைக்கிறார்.
Prime Minister Modi-Chief Minister Vijay
Published on: 
Summary

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் கொடியசைத்துச் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை மாநகர போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லாக விளங்கும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல் செயல்பாட்டுப் பகுதியாக உருவெடுத்துள்ள பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் பாதை (வழித்தடம்-4) பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது.

இந்தப் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர், அன்று காலை 10.55 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் கொடியசைத்துச் சேவையைத் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் குறுகிய பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் போதும் தொடக்க விழாவிலும் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். விஜய் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அரசு நிகழ்வு ஒன்றில் ஒரே மேடையில் கலந்துகொள்வதும், இணைந்து பயணம் செய்வதும் இதுவே முதல்முறையாகும்.

தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

பிரதமரின் வருகை மற்றும் முதல்வர் உடனான மெட்ரோ ரெயில் பயணத்தை முன்னிட்டுச் சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் முக்கியப் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் பயணப் பாதைகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் ஐந்தடுக்குப் பாதுகாப்பு வளையம் அமைக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com