

பிரதமர் மோடி சென்னையில் 2 இடங்களில் ரோடு ஷோ செல்கிறார். முதல்-அமைச்சர் விஜய் உடன் ஒன்றாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்.
தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு அவரை முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். ரூ.750 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், போரூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி மெட்ரோ ரெயில் நிலையம் வரை பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு, அங்கிருந்து புறப்படும் பிரதமர் மோடி, பகல் 12.15 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வருகிறார். அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துகிறார்.
பின்னர், ஐ.ஐ.டி.யில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து, ஐ.ஐ.டி. வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
முன்னதாக, ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
அங்கு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி நந்தம்பாக்கம் செல்கிறார். அங்கு மதியம் 3 மணியளவில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் விமான நிலையத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து டெல்லிக்கு புறப்படுகிறார்.
சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அவர் செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரையிலும், அங்கிருந்து சென்னை ஐ.ஐ.டி. வரையிலும், பின்னர் ஐ.ஐ.டி.யில் இருந்து நந்தம்பாக்கம் செல்லும் வழித்தடத்திலும் தமிழக பா.ஜனதா சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த வழித்தடங்களில் 2 இடங்களில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் செய்கிறார். அதில் அவர் திறந்து வைக்கும் திட்டங்களின் விவரம் வருமாறு:-
* சென்னை பூந்தமல்லி- வடபழனி இடையிலான 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடம் திறப்பு.
* விருதுநகர் மாவட்டம் வடுகப்பட்டி முதல் தெற்கு வெங்கானூர் (ராஜப்பாளையம்) வரையிலான 36 கி.மீ. நான்கு வழிச்சாலை திறப்பு.
* மதுரை சுற்றுச்சாலையில் 30 கி.மீ. தொலைவிலான நான்கு வழிச்சாலைப் பகுதி திறப்பு.
* அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அம்பை, பழனி, நாமக்கல், பரமக்குடி, வேலூர் கண்டோன்மெண்ட் ஆகிய 5 ரெயில் நிலையங்கள்.
* காரைக்கால்- பேரளம் இடையே 23 கிலோ மீட்டர் தூரத்திலான ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாதை.
* கோவையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலங்கள்.
* சென்னை துறைமுகத்தில் சரக்குகளை சேமிக்கும் தளம், 4 சரக்குக் கிடங்குகள், மேம்படுத்தப்பட்ட கப்பல் சுற்றுலா முனையம், மாலுமிகள் மையம் மற்றும் நிலக்கரி கையாளும் 3-வது தளம் திறப்பு.
* தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வளர்ச்சித் திட்டங்கள்.
அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களின் விவரம் வருமாறு:
* திருவாரூர் புறவழிச்சாலையில், நாகப்பட்டினம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம்.
* சென்னை மணலி சுத்திகரிப்பு ஆலையில் உயர்தர மசகு எண்ணெய் தயாரிப்பதற்கான திட்டம். இதன் திட்ட மதிப்பு சுமார் ரூ.1,620 கோடி.
* தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள்.
* காமராஜர் துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் நிலையில் துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.