

நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
* திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு மண்டபமும், இலவச இருசக்கர வாகன நிறுத்தமும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தவெக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கட்டணமில்லா இருசக்கர வாகன நிறுத்தம் வசதி இருந்தது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது. காவல்துறை தரப்பில் புகாரும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொண்டு கோவிலின் நிதி நிலைமையும் ஆலோசித்து உறுப்பினர் கூறிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
* திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. செவ்வாய் கிழமை தோறும் காலை, மாலை என இருவேளையும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஹாரி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், திருத்தணி கோவிலில் உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரின் பரிந்துரைக்காக காத்துள்ளோம். இணையதளம் மூலமாக தரிசன டிக்கெட் பெறுவதற்கான இணையதளம், செயலிகளை உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் இணையதள வசதிகள் வரும்போது உள்ளூர் மக்களுக்கான தரிசனத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
* விருத்தாசலம் என்றாலே கோவில் மாநகரம். விருத்தாசலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து உள்ளது அதனை சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நாங்கள் எல்லாம் தொகுதிக்குள் போகும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் வந்தால் மக்களோடு சேர்ந்து அங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக சொல்லும்போது உங்களுக்கு தெளிவாக புரியும். அமைச்சரும் எங்களோடு சேர்ந்து வரும் போது அந்த பணிகளும்சிறப்பாக செய்ய முடியும் என்பதை என் கருத்தாக கூறுகிறேன் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், உறுப்பினரின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக ஆய்வு செய்து அனைத்து கோவில்களுக்கும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதான திட்டத்தை தன்னார்வலர்களும் செய்ய முன்வரும் நிலையில், அந்த கோவிலில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே தங்கு தடை இல்லாமல் அன்னதானத்தை வழங்கும் வகையில் கோவிலின் பக்கவாட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கட்டிடங்களை புனரமைத்து அதில் அன்னதான கூடத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கோவில்களில் இந்த அன்னதான சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ள ஆய்வு செய்து வருகிறோம். கூடிய விரைவில் உரிய அனுமதி பெற்று அன்னதான திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.