22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!

"கேப்டனின் லட்சியத்தை வென்றெடுப்பதே நமது கடமை!" – பிரேமலதா விஜயகாந்த்
Premalatha - Vijayakanth
Published on
Summary

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கட்சியின் வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்ததோடு, மறைந்த தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் லட்சியங்களை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழலற்ற நேர்மையான மக்கள் ஆட்சி!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான மக்கள் ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சிதான் நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

நமது கழகம் வெற்றிகரமாக 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று பெருமையுடன் 22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொண்டர்களின் அர்ப்பணிப்பு

கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கழகக் கொடியைக் கொண்டு சேர்த்த தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.

"தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து சாதனை படைத்த நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை.

கட்சியின் தொடக்க மாநாட்டில் சுமார் 28 லட்சம் பேர் திரண்டு கலந்து கொண்டது இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது" என பிரேமலதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2026 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற சாதனைகள்!

கட்சியின் தற்போதைய அரசியல் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர், முதல் முறையாக இந்த ஆண்டு (2026) நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினரை தே.மு.தி.க. பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், இந்த 2026-ஆம் ஆண்டில் மீண்டும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் நம்கட்சி வெற்றி பெற்று, கேப்டனின் கம்பீரக் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளோம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

தெய்வமாக வாழும் கேப்டன் விஜயகாந்த்!

மறைந்த தலைவர் விஜயகாந்த் குறித்து பிரேமலதா விஜயகாந்த் எழுதியுள்ளதாவது:


"என்றென்றும் நமக்குத் துணையாக நின்று நம்மையும் நமது கழகத்தையும் வழிநடத்திய நமது அன்புத் தலைவர், புரட்சிக் கலைஞர் கேப்டனை வணங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவோம்.

நமது தலைவர் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, இன்று நம்மிடையே தெய்வமாக இருக்கிறார். அவரது புகழும் மனிதநேயமும், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் தமிழக மக்கள் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.

"கேப்டன் வாழ்ந்தார், இருந்தார், அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்று உருகி எழுதியுள்ளார்.

தலைவர் எதற்காகக் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே தற்போதைய தே.மு.தி.க. தொண்டர்களின் முதன்மையான கடமை என்று கூறி, அனைவரும் இந்த நன்நாளில் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு பிரேமலதா விஜயகாந்த் தனது கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com