

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தின் மீது பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.வில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். உள்ளாட்சிகளிலேயே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது.
மக்கள் தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பா.ம.க. எதிர்க்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 14 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறையை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்தால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.
செவி வழி செய்தியை வைத்து தொகுதி மறுவரையறை தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு என்றது போல் ஆகி விடும் என்றார்.