காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
CM Vijay
Published on
Summary

அரசு பள்ளியில் வகுப்பு வாரியாக சென்ற முதலமைச்சர் விஜய் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

உணவுப் பட்டியல்

சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் (செங்கல்பட்டு), தாராபுரம் (திருப்பூர்) ஆகிய 2 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த திட்டத்தின் உணவு பட்டியலில் திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை - உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு ஆகியவை இடம் பெற்றுள்ளன.

திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து அவர் உணவு அருந்தினார். உணவு அருந்தும் மாணவர்களுடன் முதலமைச்சர் விஜய் சிரித்து பேசி மகிழ்ந்தார். காலை உணவு ருசியாக உள்ளதா என மாணவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து பள்ளியின் மற்ற பகுதிகளுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஒரு வகுப்பறையில் 'மாம்பழமாம் மாம்பழம்' மழலையர் பாடலை பள்ளி சிறார்கள் பாடிய நிலையில் முதலமைச்சர் விஜய் அவர்களை கைதட்டி பாராட்டினார்.

அரசு பள்ளியில் வகுப்பு வாரியாக சென்ற முதலமைச்சர் விஜய் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com