

தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழாவை நாளை தொடங்கி வைப்பது பெருந்தலைவர் புகழுக்கு மணிமகுடம் ஆக அமையும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா பெருந்தலைவர் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற விழா. பெருந்தலைவருக்கு மறுபெயர் கல்விக்கண் திறந்த கர்மவீரர். "தடுக்கி விழுந்தால் தொடக்கப்பள்ளி, ஓடி விழுந்தால் உயர்நிலைப்பள்ளி" என்பது பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் உணரப்பட்ட பழமொழியாகும்.
இன்றைய தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அன்றே அடித்தளமிட்ட பெருமைமிக்கவர் பெருந்தலைவர் காமராஜர். குறிப்பாக ஏழை எளிய குழந்தைகளும் பசியின்றி படிக்க வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டமானது அவரது ஆட்சிக்காலத்தின் பொன்னான சாதனை.
அப்பேற்பட்ட பெருந்தலைவர் காமராஜரை கொள்கை தலைவராக ஏற்றிருக்கும் த.வெ.க-வின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழாவை நாளை தொடங்கி வைப்பது பெருந்தலைவர் புகழுக்கு மணிமகுடம் ஆக அமையும்.
இத்திட்டத்தினால் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுவதில் 7,537 கூடுதல் பள்ளிகள் பயன்பெறுவதும், 34.64 லட்சம் மாணாக்கர்கள் பயன்பெறுவதில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் மாணாக்கர்கள் கூடுதலாக பயன் பெறுவதும், ரூ. 724 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட இத்திட்டத்தில் ரூ. 217.63 கோடி கூடுதலான நிதி ஒதுக்கிடு செய்திருப்பதும் பாராட்டத்தக்கது.
தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) முழு மனதோடு வரவேற்கிறது.
இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.