

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக சுமார் 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் களம் இறங்கிய பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் தான் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து இருப்பது பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கான கொண்டாட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.