

இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் கட்டும் முயற்சியை தனது அரசு கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய்,
"சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும், சரக்கு போக்குவரத்தை அதிகரித்தும் நோக்கத்திலும் புதிய விமான நிலயத்திற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும்.
ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.
ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20.1.2025 அன்று அப்பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.
நீண்ட நாட்களுக்கு இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.
விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. இந்த விவசாய நிலையங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.
விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கு விமான நிலையங்களின் பங்களிப்பு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.
ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அப்போது நான் வலியுறுத்தியிருந்தேன்.
மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும்பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும் துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.
ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைக்க பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலயத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.
இதற்கிடையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய டெர்மினல் 5 என்ற புதிய முனையம் அமைக்க ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து சாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக இருக்கும்.
மேலும் புதிய டெர்மினல் 5 செயலாக்கத்திற்கு பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்." எனத் தெரிவித்தார்.