ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை- லாட்டரி மருமகன்: காரசார விவாதத்தை ஏற்படுத்திய பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம்

பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார்.
அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு
அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு
Published on
Summary

தமிழக சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், நாகர்கோவிலில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம், அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கவில்லை. த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது?. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் என பேசினார்.

இதுதொடர்பாக அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,

பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று சொன்னார், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று. எங்களுடைய தலைவரின் முதல் பிரசாரம், காலடி பட்டது விவசாயிகளின் கண்ணீருக்காக. விவசாயத்திற்காக குரல் கொடுப்போம், டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என சொல்லக்கூடியவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக, பரந்தூர் மட்டுமல்ல திருவண்ணாமலையில் மேல்மா விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களுடைய குரலுக்கு பேசியது இல்லை. நேற்றே தெளிவா சொல்லியாச்சு, சென்னை விமான நிலையத்தின் இன்றைய பங்கு என்ன? அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சொல்லியாச்சு.

ஆனால் நேற்றில் இருந்து தி.மு.க. இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழகத்தின் முதலீடே போய் விடும் என்று சொல்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான், அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பே தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காக மட்டுமே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களோட 10 மடங்கு பொருளாதார இங்கு வந்து இருக்கும். ஏன் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியே எங்கள் முதலமைச்சர் கொடுப்பார் என்றார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டார். அதற்கு எந்தவிதமான மாற்றுகருத்தும் கிடையாது. அதற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறி 90 சதவீத நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையும் கொடுத்தாச்சு. கையப்படுத்திய நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? விவசாயிகளுக்கு கொடுக்கப்போறீங்களா? என்பது குறித்து அரசின் விளக்கம் தேவை என்றார்.

அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில்,

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. பட்டா நிலங்கள் 3,774. 3 போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது. 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றார்.

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க உள்ளீர்கள் என்று நான் கேட்கட்டுமா? என்றார்.

இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் அமைத்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போது பிரச்சனை ஏற்படும். மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி 2-வது ரன்வே வரும்? என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து மக்களை பாதிக்காத வகையில் திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தும் சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com