

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கல்வி அமைச்சரின் செயல்பாடுகளை விமர்சித்து, லஞ்சம் தொடர்பான புகார்களை அரசு முறையாக விசாரிக்காததற்கு கேள்வி எழுப்பியுள்ளார். லஞ்சம் கொடுக்க முயன்றவரை காப்பாற்றுவது ஏன் எனவும், அமைச்சரின் செயல்பாடுகள் முறைகேடுகளை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி வரை உங்களுக்கு லஞ்சம் தரத் தயாராக இருந்த நபரை அடையாளம் காட்டுவதிலோ அல்லது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்வதிலோ த.வெ.க. அரசுக்கு என்ன சிக்கல்? லஞ்சம், ஊழல் குறித்த புகார்களை பதிவு செய்ய உங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண்ணிற்கு, நீங்களே ‘anonymous’ ஆக புகார் அளித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு அரசு அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றவாளியை எதற்காக காப்பாற்றுகிறீர்கள்?
அதுமட்டுமன்றி, உங்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக இருக்கும் லயோலா மணி அவர்களை எதற்காக அணுகுகிறார்கள்? அவரைப் பிடித்தால் தான் உங்களை நெருங்க முடியும் என்ற சொல்லப்படாத விதி ஏதேனும் இருக்கிறதா? அல்லது அவர் மூலமாகத் தான் உங்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கிறதா?
‘ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காதீர்கள்’ என்று முதல்வரே பொது மேடையில் கூறிய பிறகும் கூட, கோடிக்கணக்கில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க ஒருவர் முயல்கிறார் என்றால், அமைச்சர்கள் மட்டத்தில் முறைகேடுகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று தானே அர்த்தம்? ஒருவேளை பேரம் படியாததால் தான் இன்று பொதுவெளியில் வந்து இப்படி புலம்புகிறீர்களோ? பதில் சொல்லுங்கள் அமைச்சரே… என்று கூறியுள்ளார்.