

பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மேலும் பண மோசடியில் ஈடுபட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு தடையின்றி ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்ற அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஸ்போட்டை வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.