

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சி அமைத்த பிறகு, மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேவேளையில் மின்தடை இல்லை. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததனாலும், கோடைக்காலம் நீட்டிப்பாலும் மின் நுகர்வு அதிகமாகியுள்ளது. அதற்கு ஏற்ப வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு காரணம், டிரான்ஸ்பர் பழுது போன்றவற்றால் மின்தடை ஏற்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே ஒரு சில தினங்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் மின்வாரியத் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அமைச்சர் பேசும்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் பேசிக் கொண்டிருக்கும்போது, சில விநாடிகள் மின்தடை ஏற்பட்டது. ஜெனரேட்டர் மாற்றம் காரணமாக 5 விநாடிகள் மின்தடை ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் திருமாவளவன், பெ. சண்முகம் போன்ற தலைவர்கள் பேசும்போதும் இதுபோன்று மின்தடை ஏற்பட்டுள்ளது.