

கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைக்காக அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
அந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, காவிரி தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக்கு நேற்று வந்தடைந்தது.
கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது.
இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1000 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 500 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து, சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களை தூவி வணங்கினர்.
கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.