

தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற இந்த முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்த த.வெ.க. அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் கன்னிமாரா நூலகம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்பட பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
புத்தக எழுத்தாளர்கள் இன்றி ஏ.ஐ. மூலமாக புத்தகங்களை வடிவமைத்து அதற்கு போலியான பெயர்களையும் வைத்து முறைகேடு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அகல்விளக்கு பதிப்பகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் போலியான புத்தகங்கள் வாங்கியதில் அகல்விளக்கு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அகல்விளக்கு பதிப்பகத்துக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட இடங்களில் உள்ள நூல் நிலையங்களிலும், கோவை பெரியார் அறிவுலகத்திலும் இந்த சோதனை நடைபெற்றது.
இதில் அகல்விளக்கு பதிப்பகம் புத்தகங்களை நூலகங்களுக்கு சப்ளை செய்தது, விதிகளை மீறி செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்படி முறைகேடாக புத்தகங்களை கொள்முதல் செய்ததற்கு நூலக அதிகாரிகளும் உடந்தையாக இருந்து உள்ளனர். இதனை தொடர்ந்து சென்னை பொது நூலக இயக்குனரகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் ஆகிய வற்றில் பணிபுரியும் நபர் கள் மீதும் மோகன் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தற்போது அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பலரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக நூலக அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை பாய உள்ளது. நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியதில் அவர்களின் பங்கு முக்கியமாக இருந்து இருக்கும் நிலையில் இதன் பின்னணியில் இருக்கும் அரசு துறை அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர்.
இதையடுத்து 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருவதால் புத்தக முறைகேடு வழக்கில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் இன்று புத்தக கொள்முதல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்து விரிவாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை.
கடந்த 3 ஆண்டுகளாக புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. புத்தக கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது. யாராக இருந்தாலும் ஒருவரையும் விட மாட்டோம்.
த.வெ.க. ஆட்சியில் போலியான புத்தகங்கள் எதுவும் வாங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.