

டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்திற்கு கரூர் கம்பெனி காரணமாக இருக்கலாம் என அமைச்சர் குற்றம்சாட்டினார். மின்சார துறையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் பெறும் முயற்சிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இடைத்தேர்தல்களை சந்திக்க அரசு தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் இணைந்து 2029-ம் ஆண்டிற்குள் 10 GWH மின்கல ஆற்றல் சேமிப்புத் திறன் உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை - 2026 மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தை அமைச்சர் நிர்மல்குமார் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும், இயக்குநருமான ராஜேஷ் லக்கானி மற்றும் பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்த பிறகு மின்துறையில் பல மாற்றங்களை செய்து உள்ளோம். ஏற்கனவே உள்ள சோலார் முறைகளை சீர் செய்து வருகிறோம். மின்சார வாரியத்தில் புதிய நடைமுறைகளை கொண்டு வந்து இருக்கிறோம். ஆன்லைன் மூலமாக அனைத்து விண்ணப்பங்களும் பெறப்படும்.
தமிழ்நாட்டின் நலன் கருதி மின்சாரிய வாரியம் புதிய திட்டங்கள் புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் சோலார் மூலம் 14 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பெறப்படுகிறது. 10 ஆயிரம் மெகாவாட் காற்றாலையில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை வீடுகளுக்கு சோலார் ஏப்ரல் வரை 87 ஆயிரம் வீடுகளில் இருந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 33 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 1 லட்சம் வீடுகளில் சோலார் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புக்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது, அதன் மூலம் பல முதலீடுகள் பெற முடியும்.
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றி முன்னாள் முதலமைச்சர் பேசி உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறியது, கடந்த 5 ஆண்டுகள் செய்த தவறுகளை சரி செய்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. அதற்குள் ஜி.எஸ்.டி. வருவாய் குறையாது. 5 ஆண்டுகளில் கடந்த கால ஆட்சியில் இருந்தவர்கள் செய்த தவறுகளால் தான் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளது.
இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் எங்கும் செல்லவில்லை. இடைத்தேர்தல் பயம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இல்லை, எத்தனை இடைத்தேர்தல் வந்தாலும் முதலமைச்சர் அதனை சந்திக்க தயாராக உள்ளார்.
இடைத்தேர்தலுக்கான பயம் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலினுக்கு இருக்கலாம். அனைத்து சிறைகளையும் சீர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. எங்கு எல்லாம் என்ன தவறு நடந்து உள்ளது என ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்திற்கு பின்னால் யார் உள்ளார்கள் என அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் ஒரு நாளைக்கு 60 முதல் 80 கோடி ரூபாய்க்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துறையின் அமைச்சர் பல்வேறு சீரமைப்புகளை செய்து வருகிறார். இதை பிடிக்காத கரூர் கம்பெனி போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள். டாஸ்மாக் காலி பாட்டில் விவகாரத்தில் கரூர் கம்பெனியோ அல்லது வேறு யாரும் தலையிட்டால் அரசு அதனை அனுமதிக்காது. ஏதோ ஒரு வகையில் அரசு துறையை முடக்க நினைத்தார்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பல திட்டங்களை செய்து உள்ளோம். ஆனால் டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்திற்கு பின்னால் கரூர் கம்பெனி இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அந்த அரசு அதனை எதிர்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.