

சட்டசபையில் வினா–விடை நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டு கட்டமைப்புகள் தொடர்பாக சுமார் 23 எம்எல்ஏக்கள் கேட்ட துணை கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து, அனைத்து விளையாட்டு கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் உருவாக்க பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாநில அளவிலான போட்டிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் மைதானங்களில் மண் தரையில் விளையாடுவதால் மாணவ மாணவிகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க, மேட் அமைத்து விளையாடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் காவிரியில் வளர்ந்தவன். டெல்டா பகுதிகளில் இருந்து அதிகளவில் வேகமாக ஓடக்கூடிய வீரர்கள் உருவாகின்றனர்.
தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் நீச்சல் வீரர்களும், தென் மாவட்டங்களில் கபடி வீரர்களும் அதிகளவில் உள்ளனர். கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம் உருவாக்கப்படும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னை நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது கனவு. மற்ற மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என அரசு கருதுகிறது . எதிர்காலத்தில் 36 ஆயிரம் பேர் அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்னிலம் பகுதியில் விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார் நன்னிலம் பகுதியில் இருந்து ஒரு ஒலிம்பிக் வீராங்கனை உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாது. குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் முழுமையான வசதிகளை செய்து கொடுக்க முடியும்
ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நிதி கேட்காமல் மினி ஸ்டேடியம் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். கல்வராயன் மலை, உதகை, குன்னூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளையாட்டுக்கான சிறப்பு நிகழ்வுகள் போதிய அளவில் நடைபெறவில்லை.
இப்பகுதிகளில் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள நிலையில், விளையாட்டை மலைவாழ் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையும் விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம், ஜிம், ஓடுதளம் உருவாக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் என்றார்.