வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரின் தேசப்பற்றை போற்றி வணங்குவோம் - அன்புமணி ராமதாஸ்

கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த தலைவர் என்றால் அது வ.உ.சிதம்பரம் பிள்ளை.
anbumani ramadoss
Published on: 

வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் நினைவு நாளில் அவரது தேசப்பற்றை போற்றி வணங்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாள்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களின் கப்பல் வணிகத்திற்கு எதிராகச் சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய இவரது தியாகம் பல்வேறு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் மூலம் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இவரின் நினைவு நாளில் அரசியல் தலைவர்கள் பலரும் நினைவு நாளை நினைவு கூர்ந்து புகழ் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

வ.உ.சிதம்பரனாரின் 90-ஆம் நினைவு நாளில் அவரது தேசப்பற்றை போற்றி வணங்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஆங்கிலேயரை நடுங்க வைத்தவர்

விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் அவருக்கு நான் எனது மரியாதையை செலுத்துகிறேன்.

கத்தியின்றி, இரத்தமின்றி ஆங்கிலேயர்களை நடுங்க வைத்த தலைவர் என்றால் அது வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தான். வணிகத்தின் மூலம் இந்தியாவைக் கைப்பறிய ஆங்கிலேயர் அரசின் அடித்தளத்தை அதே வணிகத்தைக் கொண்டே தகர்க்க வேண்டும் என்று நினைத்தவர் அவர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது. அதனால் தான் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்து கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கினார்கள்.

தேசப்பற்று என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அவர். அவரது போராட்டங்களையும், தியாகங்களையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி, அவர்களிடம் தேசப்பற்றை தழைக்கச் செய்ய நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X