மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம்

வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Megamalai issue
Published on

ஒத்திவைப்பு

மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேறோரு அமர்வில் ஆஜரான நிலையில், இந்த வழக்கை தள்ளி வைக்க வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று விசாரணையை செப் 22 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேகமலை விவகாரம்

மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும், இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அங்கு யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும், மின் மற்றும் நீர் இணைப்புகளை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லையென்றால் ராணுவத்தை அனுப்புவோம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரசு தரப்பு

இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அறிவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று தனது வாதத்தை அரசு முன்வைத்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.

போராட்டம்

மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 4600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மேகமலை ஆக்கிரமிப்புக்களை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விசாரணையானது செப் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com