சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!

15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.
judges assumed
Published on

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து 15 பேரை நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.

புதிய நீதிபதிகளின் விவரம்

நியமிக்கப்பட்டுள்ள 15 பேரில், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன் ஆகிய 8 வழக்கறிஞர்களும், பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 மாவட்ட நீதிபதிகளும் அடங்குவர்.

வரலாற்று நிகழ்வு

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு (10 ஆண்டுகளுக்குப் பின்), ஒரே நேரத்தில் 15 நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதிகளின் வருகையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை வேகம் பெறும் என்றும், நீதித்துறை கட்டமைப்பு மேலும் வலுவடையும் என்றும் வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதிகளுக்குத் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். "நீதியின் மாண்பையும், அரசமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சம நீதியும் சமூக நீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் அவர்களின் பணி சிறக்கட்டும்" என அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com