மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60இருந்து 62ஆக முறைப்படி உயர்த்த ஏழு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது, நீதித்துறையில் பல ஆண்டுகளாக சிறப்புடனும், அனுபவத்துடனும் செயல்படும் நீதிபதிகள் பணியிலிருந்து விலகுவதை தடுக்கவும், முறைப்படி விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவை அந்தந்த மாநில அரசுகள் ஒப்புக்கொண்டத்தை தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வானது, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதிகளின் விசாரணை என்பது வெறும் கண்மூடித்தனமான மாயையாக இல்லாமல், நீதி கிடைப்பதை உறுதி செய்யவே என்றும், மேலும் இரண்டு மாதங்களுக்குள் இந்த விதிகளை திருத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் வயதுவரம்பை உய்ர்த்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்கள், சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் 60 வயதை எட்டும்போது இந்த உத்தரவை கடைப்பிடித்து ஒய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கானது நிலுவையில் உள்ள காரணத்தினால், இந்த ஏழு மாநிலங்களில் தற்போது 60 வயதை கடந்த அதிகாரிகள் அந்த வயதில் ஓய்வு பெற மாட்டார்கள் என்றும், இந்த உத்தரவு, மார்ச் 31, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் வேறு பணியில் சேராத பட்சத்தில், நீதித்துறைப் பணிக்குத் திரும்புவதற்கான விருப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் நீதித்துறை பணிக்கு செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது முடிவை இரண்டு வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் இத்த உத்தரவு குறித்தான முடிவை மறுபரிசீலனை செய்து, இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,அசாம், பீகார்,நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி , ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.