

பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளருமான தருண் தேஜ்பால் 'தெஹல்கா' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறார். இதன் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.
2013 நவம்பர் 7 அன்று நிகழ்வொன்றின்போது கோவாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் லிப்டில் வைத்து தன்னை தருண் தேஜ்பால் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்தார்.
ஆனால் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, சந்தேகத்தின் பலனைத் தருண் தேஜ்பாலுக்கு வழங்கி 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இத்தீர்ப்பை எதிர்த்து கோவா காவல் துறையும் அரசுத் தரப்பும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
கோவாவுக்கு என்று தனி உயர்நீதிமன்றம் கிடையாது. பம்பாய் உய்ரநீதிமன்றத்தின் கோவா அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 6 அன்று விசாரணை முடிவில், 2021ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.
மேல்முறையீட்டுக்கு ஏதுவாக தீர்ப்புக்கு தடை விதிக்க தேஜ்பாலின் வழக்கறிஞர் கோரினார்.
இதைத்தொடர்ந்து தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உச்சநீதிமன்ற விதிகளின்படி ஒரு குற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் சரணடைய வேண்டும்” என வாதிட்டார்.
தருண் தேஜ்பால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தருண் தேஜ்பாலுக்கு எதிரான தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனவே, அவரை சரணடையுமாறு கோருவது பொருத்தமானதாக இருக்காது” என்றார்.
மேலும், தேஜ்பாலுக்கு விவாரணம் அளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் கொண்டிருந்தால், அவர் சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கபில் சிபல் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், “தருண் தேஜ்பால் முதலில் சரணடைய வேண்டும். அவர் இரண்டு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என்று உத்தரவிட்டது.