முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி: அ.தி.மு.க.7 முறை, தி.மு.க. 6 முறை வென்ற வரலாறு

1989 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.டி.உக்கம்சந்த் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் 3-வது முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
மதுராந்தகம்
மதுராந்தகம்
Published on
Summary

மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது.

இதையடுத்து இந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.

காங்கிரஸ்

மதுராந்தகம் சட்டசபை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தனித்தொகுதி ஆகும். இந்த தொகுதியில் மொத்தம் 2,12,639 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,04,496 பேர். பெண் வாக்காளர்கள் 1,08,078 பேர் ஆவர். மதுராந்தகம் சட்டசபை தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.பரமேஸ்வரன் வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றியது.

அக்கட்சியின் வேட்பாளர் ஓ.வெங்கடசுப்பா ரெட்டி வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பி.பரமேஸ்வரன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3-வது முறையாக அத்தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

அதன் பிறகு 1967-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை தி.மு.க. முதல் முறையாக சந்தித்தது. அந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க. தன் வசமாக்கிக்கொண்டது. தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட குளத்தூர் கோதண்டம் வெற்றி பெற்றார்.

பின்னர் 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க.வே கைப்பற்றியது. அந்த 2 தேர்தல்களிலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதுராந்தகம் சி.ஆறுமுகம் வெற்றி பெற்றார்.

1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.உக்கம்சந்த் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 1984 தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. மதுராந்தகம் சி.ஆறுமுகம் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

1989 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.டி.உக்கம்சந்த் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் 3-வது முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. ஆனார். 1996 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 4-வது முறையாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் பெ.வாசுதேவன் எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார்.

2006-ம் ஆண்டு தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காயத்ரி தேவி வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டுக்கு பிறகு மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

2011 தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. 5-வது முறையாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக கணிதா சம்பத் தேர்தெடுக்கப்பட்டார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். இதன் மூலம் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. 7 முறை வெற்றி பெற்று வரலாறு படைத்து உள்ளது. தி.மு.க. 6 முறை வென்றுள்ளது. அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு தி.மு.க. 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார். த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 ஓட்டுகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.

தி.மு.க. வேட்பாளர் எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்றிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com