

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் முடிவு எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே 40 ஏக்கர் நிலத்தில் முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யவும் பொதுக்கூட்டம் நடத்தவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. 5 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் த.வெ.க.வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய், வருகிற 25-ந் தேதி அச்சரப்பாக்கம் பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கம் புறவழிச்சாலையில் உள்ள வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் இடம் முதலில் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்காக தரைத்தளம் சமன்படுத்தும் பணிகள் முடிந்து பிரமாண்ட மேடை அமைப்பதற்கான கூரை அமைத்து வந்தனர்.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் மேடையின் பின்புறம் மலை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், போதிய இடவசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்போது பிரசார இடம் மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு அமைக்கப்பட்ட மேடை மற்றும் இதர பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தற்போது, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் முடிவு எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே 40 ஏக்கர் நிலத்தில் முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரம் செய்யவும் பொதுக்கூட்டம் நடத்தவும் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அங்கு மேடை அமைக்கும் பணிகள், ஜே.சி.பி. எந்திரங்களைக் கொண்டு தரைகளை சமப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.