விரைவில் மாறும் தமிழக அமைச்சரவை: முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Chief Minister Vijay
Published on
Summary

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அமைச்சர்களின் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை முதலமைச்சர் நேரடியாக கண்காணித்தார்.

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து சில மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், மாநில அமைச்சரவையில் விரைவில் பெரும் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், முதலமைச்சர் விஜய் இந்த முடிவை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்.

ஊழலற்ற நிர்வாகத்தில் உறுதியான நிலைப்பாடு

அரசு நிர்வாகத்தில் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்துவிட கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் ஆரம்பத்திலிருந்தே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். அமைச்சரவைக் கூட்டங்களிலும், "யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தொடர்ந்து எச்சரித்து வந்தார். இந்நிலையில், சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெளிவரத் தொடங்கியது அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அமைச்சர்களின் கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளை முதலமைச்சர் நேரடியாக கண்காணித்தார். மேலும், அமைச்சர்களின் அன்றாட தொடர்புகள், சந்திப்புகள் மற்றும் அவர்களின் துறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து உளவுத்துறை மூலம் தனிப்பட்ட அறிக்கை பட்டியல் ஒன்றையும் அவர் தயார் செய்து வைத்துள்ளார்.

கூடுதலாக, மாநிலத்தில் நிலவும் ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் போது பொதுமக்கள் எதிர்கொண்ட அசவுகரியங்கள் போன்றவை முதலமைச்சருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

ஜெயலலிதா பாணியில் நடவடிக்கை

மக்கள் மத்தியில் அரசுக்கு ஏற்பட்டுள்ள சிறு தயக்கங்களையும் போக்க வேண்டுமானால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பின்பற்றிய அதிரடி அமைச்சரவை மாற்ற முறையை கையில் எடுப்பதே சரியானது என்ற முடிவுக்கு விஜய் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தகுதிக்கும் திறமைக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில், சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

இடைத்தேர்தலுக்கு பின் பெரிய மாற்றம்

தற்போது ‘காலை உணவுத் திட்ட விரிவாக்கம்’ மற்றும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ போன்ற அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடக்க நிலையில் உள்ளன. மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெறவுள்ளன. எனவே, இந்த இடைத்தேர்தல் பணிகள் முழுமையாக நிறைவடைந்தவுடன், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் திறம்பட செயல்படாத அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் அல்லது புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com