பரந்தூர் திட்டத்தை எப்படி பாதியில் கைவிடமுடியும்?: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
Published on: 
Summary

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதியில் திட்டத்தை எப்படி கைவிட முடியும்? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆண்டுக்கு சுமார் மூன்று கோடி பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இதுவரை 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

திட்டம் ரத்து

விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.

மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டது. எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் 110 வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்.

அரசுக்கு கேள்வி

அதேபோல பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 1,700 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு அரசுப் பணம் 680 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதியில் திட்டத்தை எப்படி கைவிட முடியும்? தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எப்படி அந்தப் பகுதி சாத்தியம் இல்லாதது எனக் கூற முடியும்? என அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், விமான நிலையம் அமையவுள்ள பகுதியில், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதனால், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது சிக்கலானது. தவறான முடிவுகள் திருத்தப்பட வேண்டும். விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது அரசின் கொள்கை முடிவு. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் கூறினார். மேலும் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

X