தமிழ்நாடு அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மா.சுப்பிரமணியன்

கோடை வெப்பம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கடலோர அரிப்பு போன்ற பேரிடர்களையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மா.சுப்பிரமணியன்
Published on: 
Summary

தமிழ்நாட்டில் எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறிய த.வெ.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, சென்னை மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பரிந்துரை

உலக அளவில், எல் நினோ பொதுவாக வறட்சியை ஏற்படுத்தும் என்றாலும், 2026-ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் இயல்பைவிட மிக அதிக அளவில் மழைப்பொழிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதோடு, கோடை வெப்பம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கடலோர அரிப்பு போன்ற பேரிடர்களையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், ‘ரீல்ஸ் ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசு’ இப்பேரிடர் குறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வரும் நிலையில்,

ஆர்ப்பாட்டம்

‘வருமுன் காப்போம்’ என்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில், மக்கள் மீது அக்கறையின்றி குறட்டை விட்டு தூங்கும் அரசான ஆளும் த.வெ.க. அரசினை தட்டியெழுப்பும் வகையில்,

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநகராட்சி பிரதிநிதிகளின் மக்கள் நலப் பணிகளை முடக்கியும் வரும் தமிழ்நாடு அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து, சென்னை தெற்கு – சென்னை மேற்கு – சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகிற 15.10.2026, வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை, ‘கலைஞர் பொன்விழா வளைவு” அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு – சென்னை தென்மேற்கு மாவட்டச் செயலாளர் த.வேலு, கழக கல்வியாளர் அணிச் செயலாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்.பி., - சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்கள் – மண்டலக்குழு தலைவர்கள்- மாநகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, மாற்றுத் திறனாளிகள் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, கல்வியாளர்கள் அணி ஆகிய அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com